Thursday, February 22, 2007

பேரரசு --The Terror




நெறய தமிழ் பட போஸ்டர்ல எல்லாம் பார்த்து இருப்பீங்க " இந்த பொங்கல்/தீபாவளிக்கு மிரட்ட வருகிறது " அப்படின்னு போட்டு படம் பேரு போட்டிருக்கும். ஆனா ஒரு படத்தோட டைரக்டர் பேரை கேட்டாலே அவனவன் மெரண்டு ஓடுறான்னா அந்தப் பெருமை நம்ம "பெருந்தொந்தரவு" பேரரசுக்கு மட்டும்தான். இவரோட முதல் படம் "திருப்பாச்சி" -க்கு நானும் நண்பன் ஹரியும் ஈரோடு அபிராமி தியேட்டருக்கு பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு நைட் ஷோ போய் உக்காந்தோம். இது நடந்தது ஒரு ரெண்டு வருசம் முன்னாடி.படத்துல முதல் ரெண்டு மூணு சீன் பாத்தவுடனேயே எங்களுக்கு நல்லா வசமா மாட்டிக்கிட்டோம்னு தெரிஞ்சிடுச்சு. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்சு படத்துல சாமிக்கு ரெண்டு மூணு ஆடுங்கள பலி குடுக்கற சீன் வந்தது.எனக்கு என்னமோ அங்க ஆட்டு மூஞ்சிக்கு பதிலா ஹரியோட முகமும்,என்னோட முகமும் தான் தெரியுது. நாங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிட்டு "ரைட்ரா , இன்னைக்கு என்ன ஆனாலும் ஒரு கை பார்த்துடலாம்னு " முடிவு பண்ணிட்டு ரெடி ஆயிட்டோம். இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இளைய தளபதி முகத்துல சந்தனம் குங்குமம் பூசி அடையாளம் மாறுகிற சீன் வந்தப்போ எங்களால தாங்க முடியல. "சூப்பரப்பு"அப்படினு சொல்லிக்கிட்டு நல்லா கை தட்டி கெக்கே பிக்கேனு விழுந்து சிரிச்சுட்டு சுத்திப் பார்த்தா எல்லோரும் எங்களை ஒரு மாதிரி கொலை வெறியோட பார்க்குறானுங்க. "நண்பா, இடம், பொருள் ,நேரம் தெரியாம காமெடி பண்ணிட்டமோ" அப்படீனுட்டு அதுக்கு அப்புறம் ரொம்ப உஷாரா இருந்தோம்.A/C வேற நிறுத்திட்டானுங்க. அந்தக் கடுப்பு வேற.கொஞ்ச நேரம் கழிச்சு ஹரி ஆரம்பிச்சுட்டான். ஸ்கிரீன்ல படம் ஓடுறப்பவே இங்க கீழே திரை விமர்சனம் பண்ணி கிழிச்சு தொங்க விட்டுக்கிட்டு இருந்தான்.பாட்டெல்லாம் வேற "கீரைக்கட்டு, பக்கெட்டு, டிக்கெட்டு, ராக்கெட்டு" னு ரொம்ப இலக்கியத்தரமா இருந்ததுனால ஒண்ணும் முடியலை எங்களாலே.ஏதோ கும்பிடப்போன தெய்வம் தலைவி (Ex-தலைவி??) த்ரிஷா அப்பப்போ வெயிலுக்கு வேப்பங்காத்தா ( என்ன உவமை!. த்ரிஷாவை நினைச்சாலே பொங்கிட்டு வருது ) வந்து எங்களை காப்பாத்துனாங்க. ஒரு வழியா படம் முடிஞ்சு குத்துயிரும் குலையுயிருமா எஸ்கேப் ஆகி ஓடி வந்துட்டோம். அன்னைக்கு முடிவு பண்ணுனதுதான்,இனி பேரரசு பக்கம் தலை வச்சு கூட படுக்கறது இல்லைனு.

ஆனா,நம்ம தமிழ் ரசிகர்கள் ரொம்ப நல்லவங்க ஆச்சே.அந்த படத்தையும் ஓட வச்சுட்டாங்க.நம்ம பேரரசுவும் கலைத்தாயை குரல்வளையை நெரிச்சுக் கொல்லாம விடுறது இல்லைங்கற முடிவோட அடுத்து மீண்டும் இளைய தளபதிய(அநேகமா இவரையும் அடுத்து ஹிட் லிஸ்ட்-ல சேர்த்தணும்னு நினைக்கிறேன்) வச்சு "சிவகாசி " படம் ,அதுவும் தீபாவளிக்கு. அந்த வருசத்துல இருந்து பொங்கல்,தீபாவளி வந்தாலே எங்க இந்த பேரரசு பய ஏதாவது படம் ரிலீஸ் பண்ணிடுவானோன்னு பயமாவே இருக்கு. இந்த படத்துல பேரரசு நடிச்சது மட்டும் இல்லாம இவருக்கு பன்ச் டயலாக் வேற.சீட்டுக்கு அடியிலே லக்ஷ்மி வெடி வெடிசச effect-லதான் எல்லோரும் தியேட்டரை விட்டு வெளியே வந்தாங்க. " உங்கம்மா எங்கம்மா நம்மை சேர்த்து வைப்பாளா, சும்மா அட சும்மா நம்மை பெத்து விட்டாளா" அப்படினு பெற்றோர்களின் கடமையை விளக்கு வைத்து வெளிச்சம் போட்டு காட்டும் பாட்டு இந்த படத்தோட சிறப்பு அம்சம்.




இதுக்கு அடுத்து நம்ம "தல" அஜீத் தெரியாம இவரை நம்பி "திருப்பதி " படம் குடுத்துட்டார்.இவரோ "தல"ய "தறுதல" ஆக்கிட்டார் இந்த படத்துல.இவரு ஏறக்குறைய ஹீரோ மாதிரி(உவ்வே சொல்லவே குமட்டிகிட்டு வருது) நடிச்சு அஜீத்தை காமெடியன் ஆக்கிட்டார்.இந்த படம் பார்த்த பீதியிலே, பேதி ஆகித்தான் பாலா "நான் கடவுள்" படத்துல இருந்து அஜீத்தை தூக்கிட்டதா ஒரு பேச்சு.

இதுக்கு அடுத்து நடந்ததுதான் பெஸ்ட் காமெடி.அடுத்த படம் "தர்மபுரி" அதுவும் யாரு கேப்டன் விஜயகாந்தை வச்சு. "சனி தனியா வந்தாலே சமாளிக்க முடியாது.இங்க துணைக்கு ஆள் கூட்டிக்கிட்டு வருதே"னு எங்களுக்கு கண்ணெல்லாம் இருண்டுடுச்சு.ஆனா இந்த படம் கேப்டனோட அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பு முனையா அமைஞ்சது.இனி இவன விட்டா இது மாதிரி நிறைய படம் நடிச்சு நம்மளை கொன்னுடுவான்னு மக்கள் உஷாராகி பேசாம இவரை M.L.A ஆக்கிட்டா படத்துல நடிக்க மாட்டார் நம்ம எஸ்கேப் ஆயிடலாம்னு ப்ளான் பண்ணி வோட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டாங்க.இந்த உண்மை புரியாம கேப்டன் இப்பவும் போறவங்க வர்றவங்க கிட்ட எல்லாம் "என் அரசியல் வாழ்க்கையை தூக்கி விட்டதே தம்பி பேரரசுதான்னு கண்ணு கலங்கி சொல்லிக்கிட்டு இருக்காரு.

நம்ம ஆளை பத்தி இன்னும் நெறய சொல்லிக்கிட்டே போகலாம்.ஏதோ இப்போ தயாரிப்பாளர்கள் கொஞ்சம் சுதாரிச்சு கொஞ்ச நாளா இவர் படம் எதுவும் வராம நாட்டுல அமைதி நிலவுது.இருந்தாலும் இவர் கலைச்சேவை என்னோட வேற ஒரு பதிவுல சொன்ன மாதிரி "அரச்ச மாவை அரைப்போமா,தொவச்ச துணிய தொவைப்போமா" லெவல்ல நடந்துகிட்டுதான் இருக்கு. இதனால சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால் பேரரசு படம்னா அந்த படம் ஓடுற தியேட்டர் பக்கம் சூடம் காட்டி, தேங்காய் ஒடச்சு, பெரிய கும்பிடா போட்டுட்டு அப்படியே ஓடியே போயிடுங்க.மீறி படம் பாக்க போனா உங்க உயிருக்கோ,மனநல,குணநல மாறுதல்களுக்கோ யாரும் உததரவாதம் இல்லை.

0 comments: