Monday, May 14, 2007

சன் டிவியின் மை டியர் பூதமும் விஜய் டிவியின் ஸ்மால் வொண்டரும்

குழந்தைகளுக்காக என்று சொல்லி ஒளிபரப்பப்படும் இந்த இரண்டு தொடர்களையும் சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் பார்த்தேன்.குழந்தைகள் தொடரை ஒரு குழந்தை (ஹி ஹி நான்தான்) பார்க்குறதுல என்ன அதிசயம்னு நீங்க கேக்கலாம்.(கேக்கலைனாலும் நான் கேட்டதா நினைச்சுப்பேன்).

இந்த ரெண்டு தொடர்களையும் ஒரு மணி நேர இடைவெளியில் பார்த்ததில மனதில் பட்ட சில விசயங்களை பற்றித்தான் இந்த பதிவு.

சன் டிவியின் தொடரில் காட்டப்படுவது எல்லாம் பில்லி,சூனியம்,மந்திரவாதம் போன்ற விசயங்கள் மட்டுமே.அதுவும் சாகசம் என்ற பெயரில். அதில் வரும் முக்கிய பாத்திரங்களான மூசா மற்றும் மற்றும் சிலரின் சிறப்பு தகுதி ஒரு இடத்தில் மறைந்து தோன்றுவது , காற்றில் பொருள் எடுப்பது , எதிர் வரும் பிரச்சினைகளை மந்திரம் மாயங்கள் மூலம் (அறிவுத் திறனால் அல்ல) விரட்டுவது,நாடகத்தில் வரும் வில்லன் பாத்திரங்களை (வயதில் பெரியவர்களாக இருந்தாலும்) அடித்துத் துரத்துவது ,வசைச் சொற்கள் பேசுவது (போடாங் கொய்யாவெல்லாம் மிகச் சாதாரணமாக பேசப்படுகிறது), கோஷ்டி தகராறு...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் வரும் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கையை காட்டுவதே இல்லை. பெற்றோர்- குழந்தைகள் பிணைப்பும் காட்டப்படுவதே இல்லை.இதில் வரும் குழந்தைகள் குழுக்களாக திட்டம் போடுவது , தைரியசாலிகளாக காட்டப்படுவது என்று சில நல்ல விசயங்களும் உள்ளன.

விஜய் டிவி-தொடரில் வரும் முக்கிய பாத்திரம் இயந்திரக் குழந்தை விக்கி மற்றும் அதன் அண்ணன் ஜேமி(Jamie).இருவரும் பள்ளியில் படிப்பவர்கள்.ஆனால் இதில் இந்த மந்திர மாயம் எல்லாம் கிடையாது. குழந்தைகள் இருப்பிடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் , பொய் சொல்லக் கூடாது , படிப்பு மட்டும் இல்லாமல் பிற விசயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் , தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் , .....இப்படிப்பட்ட விசயங்கள், முக்கியமாக போதிப்பது போல் இல்லாமல் அந்த பாத்திரங்கள் செய்யும் விசயங்களை வைத்தே சொல்லப்படுகிறது.விடலைப் பருவத்தை எட்டும் ஜேமிக்கு அவன் பெற்றோர்கள் தகுந்த முறையில் வழி காட்டுகிறார்கள்.இதில் வரும் தந்தை மற்றும் தாய் இருவருமே குழந்தைகளை குடும்பத்தின் அன்றாட சுழற்சியில் ஓர் அங்கமாகவே வைத்திருப்பார்கள்.தந்தை குழந்தைகளுடன் விளையாடுவார் , பிள்ளைகள் அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வார்கள். இந்தத் தொடரிலும் சில நெருடல்கள் உண்டு . பிள்ளைகளின் முன் முத்தமிட்டு கொள்வது , பக்கது வீட்டுப் பெண் குழந்தை ஜேமி மீது மையல் கொண்டு பெரும் பேச்சுகள் பேசுவது , மற்றும் டேட்டிங் போன்ற விசயங்கள்.ஆனால் இவற்றில் சில தப்பு என்று சொல்ல முடியாது.நமது சமூகத்தில் பழக்கம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இதில் தற்போதைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு எது போன்ற தொடர்கள் வேண்டும் என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.இந்த தொடர்களால் மட்டுமே அந்த குழந்தைகளின் எண்ணங்களோ,செயல்களோ முழுவதும் மாறி விட போவதில்லை.இருந்தாலும் விதைப்பதை நல்லதாக விதைக்கலாமே.பலனை பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்புட்டு நல்லவனாடா நீ? என்று கேட்கும் அன்பர்களுக்கு இந்த விளக்கம்.வார இறுதியில் எங்க வீட்டு தொலைக்காட்சி ரிப்பேர் ஆயிடுச்சு.அதனால டிவி பார்க்காம மல்லாக்க படுத்து விட்டத்தை வெறிச்சதுல உதிச்சதுதான் இந்த சிந்தனை எல்லாம்.ஒரு வேளை சின்ன வயசுல இந்த மாதிரி நல்ல தொடர்கள் நிறைய பார்த்திருந்தா நான் கூட ரொம்ப நல்லவனா,வல்லவனா(சிம்பு மாதிரி இல்லவே இல்லை) வளர்ந்து அப்துல் கலாமுக்கு அடுத்தபடியா ஜனாதிபதி ஆகியிருக்கலாம்.யார் கண்டது ?.நீங்களே பின்னூட்டத்தில சொல்லிட்டு (துப்பிட்டு?! ) போங்க :-).

0 comments: