Friday, February 02, 2007

அழிந்து வரும் சினிமா தியேட்டர்கள்

தலைப்பை பார்த்துட்டு என்னடா sun tv செய்தியிலே சிறப்புப் பார்வை மாதிரி இருக்கேனு பயப்படாதீங்க.விஷயம் அதுதான் என்றாலும் நான் ரொம்ப serious ஆக எல்லாம் பேச மாட்டேன்.நண்பர்களுக்கு தெரியும் நான் இப்போ இருப்பது பெங்களூரில். கடந்த 3-4 வருடங்களுக்குள் நான் இருக்கும் B.T.M மற்றும் அதைச் சுற்றி உள்ள ஜெயநகர் போன்ற இடங்களில் எனக்கு தெரிந்து 4-5 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.உதாரணத்துக்கு ஜெயநகர் 4th block புட்டண்ணா தியேட்டர், ஜெயநகர் 3rd block நந்தா தியேட்டர்,திலக் நகர் ஸ்வாகத் தியேட்டர்,ஜெயதேவா hospital முன்பு இருந்த பெயர் தெரியாத தியேட்டர் இப்படி நிறைய சொல்லலாம். இத்தனைக்கும் ஜெயநகர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள,வியாபார ஸ்தலங்கள் அதிகம் உள்ள நகரத்தின் மையப் பகுதி.நான் சொல்லும் இந்த தியேட்டர்கள் எல்லாம் பெங்களூரில் நான் அடிக்கடி சென்று வரும் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் உள்ளவை.பெங்களூரின் பிற பகுதிகளில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை


பெங்களூர் போன்ற மிகப் பெரிய,பொழுது போக்குகளுக்கு விரும்பி செல்லும் மக்கள் அதிகம் உள்ள மாநகரங்களிலேயே தியேட்டர்களுக்கு இந்த நிலைமை என்றால் மற்ற சிறு நகரங்களிலும்,கிராமங்களிலும் இருக்கும் நிலைமையை யார்,எப்படி சமாளிப்பது?.செயற்க்கைக் கோள் இணைப்புகள்,தொலைக்காட்சி மற்றும் முறையற்ற VCD விநியோகங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் எனக்கு வேறொரு மிக முக்கியமான காரணமும் தெரிகிறது.

அது "படங்களின் தரம்".யோசித்து பாருங்கள் தற்போது பொங்கலுக்கு வெளி வந்து இருக்கும் "ஆழ்வார் ",மற்றும் சில நாட்களுக்கு முன் வெளிவந்த "வல்லவன்" போன்ற படங்கள் வந்தால் யார்தான் அப்புறம் சினிமா தியேட்டருக்கு போய் படம் பார்ப்பார்கள்.படங்களில் பாதி நேரம் கதாநாயகன் வந்து "நான் இறங்கி போறவன் இல்லைடா ஏறிப் போறவன்" என்றோ (தியேட்டர்-ல இருப்பவர்கள் "எப்படியாவது போ ஆனா சீக்கிரம் போடா" என்று சொல்வார்கள்),இல்லை "வாழ்க்கை ஒரு வட்டம்டா "என்று மிகப் பெரிய அறிவியல் உண்மைகளையோ சொல்லிக் கொண்டு இருந்தால் என்ன செய்வது.இதில் Matrix படம் வந்த பிறகு time slicing தொழில் நுட்பம் பயன்படுத்தி கதாநாயகன் ஒரு 30-40 பேரை பொறுமையாக வானில் நிற்க வைத்து சுற்றி சுற்றி அடிக்கிறார்.கூலி வேலை செய்யும் கதாநாயகர் வெளிநாடுகளில் duet பாடுகிறார்.நடுச்சாலையில் அனைவரும் சுற்றி நின்று பார்க்க குத்து டான்ஸ் ஆடி நமது மானத்தை வாங்குவது தனி சோகக்கதை. .


சிம்புவோ வல்லவன் படம் பார்க்க வந்தவர்களிடம் "யாரும் யாருக்கும் ஆப்பு வக்கிறது இல்லைடா ஆப்பு ஆங்கங்க இருக்கு நம்மளாதான் தேடிப் போய் உக்கார்றோம்" என்று வல்லவன் படம் திரை இடப்பட்ட தியேட்டர்களில் எல்லா இருக்கைகளிலும் ஆப்பு இருக்கு நீங்கதான்டா தேடி வந்து உக்காந்து இருக்கீங்க அப்படீன்னு சொல்லாம சொல்றார்.இந்த தனுஷ் பையன் "சூடானா
சுளுக்கெடுத்துருவேன் "- னு இலவச நாட்டு வைத்திய விளம்பரம் செய்யறான்.

அய்யா இந்த கதாநாயகர்கள் தொந்தரவுதான் தாங்க முடியலைனு பார்த்தா புதுசா ஒருத்தர்(இயக்குநர்/நடிகர் )வந்திருக்கார்.தொந்தரவு திலகம் "பேரரசு". திருப்பாச்சி,சிவகாசி,திருப்பதி,தர்மபுரி(இதில் நடித்த captain ஒரு Terror,அதை பத்தி ஒரு தனி சரித்திரமே இருக்கு .தைரியம் இருந்தால் இங்கே சொடுக்கி படிக்கவும்) போன்ற படங்களை எடுத்ததுடன் அந்த படங்களில் வந்து "punch dialogue " எல்லாம் பேசி நம்மை உடல் முழுதும் puncture செய்கிறார். திரைக்கு வரும் படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் அருவாள் எடுத்து கேள்வி நியாயமே இல்லாமல் எல்லோரையும் வெட்டி தள்ளுகிறார்கள்.இதில் போதாத குறைக்கு " வடு மாங்கா ஊறுதுங்கோ","அரைச்ச மாவை அரைப்போமா தொவச்ச துணியை தொவைப்போமா" என்று மிகச் சிறந்த தத்துவ பாடல்கள் வேறு(இதிலும் நமது பேரரசு மற்றும் இளைய தளபதி விஜய்யின் பங்களிப்பு அதிகம்).

நல்ல படங்கள் வருகின்றன.நான் இல்லை என்று சொல்லவில்லை."கண்ட நாள் முதல்","பிதாமகன் ","கஜினி" போன்ற சில அரிய படங்களும் ,கௌதம் மேனன்,மணிரத்னம் போன்ற சிறந்த இயக்குநர்களின் படங்களும் அவ்வப்போது வருகின்றன.சூர்யா,விக்ரம் இந்த விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை. இருந்தாலும் minumum guarantee என்று சொல்லக் கூடிய,போய் உட்கார்ந்தால் ஒரு இரண்டரை மணி நேரம் நம்மை entertain பண்ணக் கூடிய படங்களோ,படம் பார்த்து வெளி வரும்போது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களோ மிகவும் குறைவு.

அப்படிப்பட்ட படங்கள் நிறைய வராதவரை,கதாநாயகர்கள் பன்ச் டயலாக் பேசி நம்மை புண்ணாக்குவதை நிறுத்தாத வரை,ஒரு குத்துப்பாட்டு கட்டாயம் வேண்டும் என்பதை மறக்கும் வரை ,இன்னும் இது போன்ற நிறைய "வரை"களை நமது படங்களில் இருந்து நீக்காத வரை இது போன்ற சினிமா தியேட்டர் மூடுவிழாக்களை நம்மால் நிறுத்த முடியாது.

0 comments: