Friday, March 02, 2007

தெருநாய்களின் அட்டூழியம்

பெங்களூரில் நேற்று மஞ்சு என்கிற 5 வயது குழந்தை நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தெரு நாய்களால் கடிபட்டு இறந்து விட்டது.கடந்த இரண்டு மாதங்களில் நடந்த இரண்டாவது துர்சம்பவம் இது. சென்ற முறை இது போன்ற சம்பவம் நடந்தவுடனேயே சுதாரித்திருக்க வேண்டிய அரசு எந்திரங்களும், அதிகாரிகளும் இதை பற்றி இன்னும் கவலைப்படாமலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமலும் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.இதில் என்னை மிகவும் கோபப்பட வைப்பது இந்த மிருகநல ஆர்வலர்களின் வாதங்கள்தான்.தெரு நாய்களை கொல்லக் கூடாது.அவற்றுக்கு ஒரு துன்பமும் வரக்கூடாது என்று கோஷம் போட்டுக்கொண்டு உள்ளனர்.


கர்நாடக அமைச்சர் இறந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளிப்பதாக சொல்லி உள்ளாரே தவிர தெருநாய்களின் தொல்லையை அழிக்க என்ன செய்ய போகிறார்கள் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.இன்னும் ரெண்டு நாட்களுக்கு செய்தி ஊடகங்களும் இதை பற்றி பேசி விட்டு நாளை ஏதாவது ஒரு நடிகையின் நாய்க்கு உடம்பு சரியில்லை என்றால் அதைப் பற்றி செய்தி எழுதப் போய்விடுவார்கள் . நேற்று அந்த குழந்தை பற்றி நானும் நண்பன் ஹரியும் பேசிக்கொண்டிருந்த போது ஹரி சொன்னான் "15 நாய்கள் கடிச்சிருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி வலிச்சிருக்கும்" .வேணாம்டா சாமி, நினைக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.அந்த குழந்தைக்கு என்ன தெரியும் பாவம்.டே அப்பா, மிருகநல ஆர்வலர்களே, தெருநாய்களை பத்தி கோஷம் போடுறதுக்கு முன்னாடி அந்த குழந்தையின் வலி பற்றியும், குழந்தையின் பெற்றோர்கள் இனி மேல் அனுபவிக்க போகும் இழப்பின் வலியையும் கொஞ்சம் யோசிச்சுட்டு கோஷம் போடுங்கப்பா.இல்லைனா தயவு செஞ்சு இந்த தெரு நாய்களை எல்லாம் உங்க வீட்டுக்கு எடுத்துட்டு போய் சந்தோசமா வளர்த்துக்கோங்க.ஆனா எல்லா நாய்களையும் கூட்டிட்டு போயிடுங்க.

சட்டப்படி பார்த்தாலும் இதே குற்றத்தை (குழந்தையை கொன்றதை) ஒரு மனிதன் செய்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை கொடுக்கலாம்.ஆனால் நாய்களை மட்டும் ஒண்ணும் செய்ய கூடாதாம்.மிருகநல ஆர்வலர்களுக்கு வேண்டுமானால் ஒரு குழந்தையின் உயிரும்,நாயின் உயிரும் சமமானதாக இருக்கலாம்.எனக்கு, ஒரு நாயின் உயிரும் மதிக்கத்தக்கதே என்றாலும் , ஒரு குழந்தையின் உயிருக்கு சமமானதல்ல. இத்தனை தெருநாய்களை பெருக விட்டு அதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கும் மாநகராட்சி மற்றும் அதன் ஊழியர்களும் இதில் மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே. தண்டிக்கப்பட வேண்டியவர்களும் கூட.

இதில் மக்களின் குற்றமும் உள்ளது(என்னையும் சேர்த்து).யாரும் தெருநாய்களின் தொந்தரவு பற்றி ஆரம்பத்திலேயே புகார் கொடுப்பதில்லை. மீண்டும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதற்க்கு முன் மக்களோ, மாநகாராட்சியோ, செய்தி ஊடகங்களோ,மிருகநல ஆர்வலர்களோ இதற்கு தயவு செய்து ஒரு தீர்வு கண்டுபிடித்து விடுங்கள்.இன்னொரு குழந்தையின் கடிபட்ட சடலத்தை செய்தித்தாளில் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.உங்களில் நிறைய பேருக்கும் இருக்காது என்று நிச்சயம் நம்புகிறேன்.

0 comments: