Tuesday, February 27, 2007

இரயில்வே பட்ஜெட் -2007


கோமாளி என்று அரசியலில் பலராலும், ஊடகங்களிலும், மக்களாலும் அழைக்கப்படும் நமது இரயில்வேதுறை அமைச்சர் திரு.லாலு பிரசாத் யாதவ் நேற்று அவருடைய நான்காவது இரயில்வே பட்ஜெட்டை வழங்கினார். தற்போது இருக்கும் சூழ்நிலைகள் மற்றும் காரணிகளை கணக்கில் கொண்டு பார்த்தால் நிச்சயம் ஒரு மிகச் சிறந்த, No-tears பட்ஜெட் என்று சொல்லக்கூடிய பட்ஜெட் வழங்கி இருக்கிறார். பிரயாணிகளுக்கு ஆறுதல் தரும் வகையில் தொடர்ச்சியாக மூன்றாவது வருடம் எந்த வித பிரயாணக் கட்டண உயர்வும் அற்ற பட்ஜெட் கொடுத்துள்ளார். சீசன் டிக்கெட் கட்டணமும் ஏற்றப்படவில்லை. புறநகர் அல்லாத சாதாரண ரெயில்களில் 2-ம் வகுப்பு கட்டணமும், அதி விரைவு அல்லாத விரைவு ரெயில்களுக்கான 2-ம் வகுப்பு கட்டணமும் 1 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை தினசரி பயணம் செய்வோருக்கு மட்டுமே பொருந்தும் . பெருகி வரும் குறுகிய இடைவெளி, குறைந்த கட்டண விமான சேவைகளுடன் போட்டி போடுவதன் முதல் படியாக , இந்த முறை குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்து. ஏ.சி. முதல் வகுப்பு கட்டணம் கூட்ட நெரிசல் உள்ள விழா, விடுமுறை காலங்களில் 3 %, சாதாரண காலங்களில் 6 % குறைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு அடுக்கு பெட்டிகளில் விழாக்காலங்களில் 2 %, சாதாரண காலங்களில் 4 % குறைக்கப்பட்டு உள்ளது. ஏ.சி. மூன்று அடுக்கு கட்டணம் விழாக்காலங்களில் 4 %, சாதாரண காலங்களில் 8 % குறைக்கப்பட்டு இருக்கிறது ஏ.சி. மூன்று அடுக்கு கட்டணம் விழா மற்றும் சாதாரண காலங்களில் 4 % குறைக்கப்படுகிறது.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளிலும் இருக்கைகள் மற்றும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய தேர்வு ஆணையம் மற்றும் ரெயில்வே தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ள செல்பவர்களுக்கு 50 % கட்டண சலுகை அளிக்கப்படும். மூத்த குடிமகன்களுக்கும், தனியாக பயணம் செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் ரெயில் பெட்டிகளில் கீழே உள்ள படுக்கை ஒதுக்கப்படும்.தற்போது இயங்கும் அதிவேக ராயில்களில் முன் பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்த்தப்படுகிறது.மேலும் இந்த பெட்டிகளில் தற்போது உள்ள மர இருக்கைகள் மாற்றப்பட்டு குஷன் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது.உடல் ஊனமுற்றவர்களுக்காக
பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பெட்டிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.




என்னை போன்ற சோம்பேறிகளை ஊக்குவிக்கும் வகையில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய தானியங்கி இயந்திரங்களை பெட்ரோல் பங்குகளிலும், ஏ.டி எம்களிலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் இது வரை செய்த சேவையை பாராட்டி இணையத்தின் மூலம் செய்யப்படும் முன்பதிவிற்கு குளிர்சாதன பெட்டிகளுக்கு 20 ரூபாயும்,இரண்டாம் வகுப்பு பெட்டிகளுக்கு 5 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது..

சரக்குரயில் கட்டணங்களை உயர்த்தாததுடன் பெட்ரோல், டீசல்,இரும்புத் தாது போன்ற பல பொருட்களுக்கு சரக்கு கட்டணங்களை குறைத்திருப்பதின் மூலம் தற்போது இருக்கும் பணவீக்க பிரச்சினைக்கும் தீர்வு காண சிறிது உதவி உள்ளார். இந்த வருடம் சரக்கு ரயில் கட்டணங்கள் மூலம் மிகுந்த வருவாய் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்களாக 32 புதிய ரயில்கள்,8 கரீப் ரத் என்று சொல்லப்படும் ரயில்கள்,மும்பையின் புறநகர் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு பயணக்கட்டண முறை , முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்தும் விதத்தில் மோப்ப நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பு,CC TV எனப்படும் கண்காணிப்பு தொலைகாட்சிகள் மற்றும் மெட்டல் டிடக்டெர் பயன்பாடு , பயணச்சீட்டு பரிசோதகருக்கு காலி இருக்கைகள் , பெட்டிகள் நிலவரங்கள் தெரிய உதவும் கையடக்க தானியங்கி கணினி, இரயில்வே பாதுகாப்பு படை காலி இடங்கள் நிரப்புதல் போன்ற பல விசயங்களை சொல்லலாம்.முக்கியமாக இந்த ஆண்டும் இரயில்வேதுறை மிகுந்த லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்ககப்படுகிறது.





இந்த சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்த லாலுவை பாராட்டுவதுடன், இதைச் செய்ய கூடிய அளவுக்கு இரயில்வேதுறைக்கு சென்ற வருடம் மிகுந்த அளவில் லாபம் ஈட்டி தர உழைத்த அனைத்து இரயில்வேதுறை ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஒரு royal salute.தொடரட்டும் உங்கள் சிறந்த சேவை.

0 comments: