Saturday, February 24, 2007

இப்படி செஞ்சா என்ன ?

நேத்து ராத்திரி (யம்மா !னு பின்னணி எல்லாம் கொடுக்கப்படாது) ,வீட்டில நண்பர்கள் எல்லாம் வார இறுதிக்கு ஊருக்கு போய்ட்டாங்க. தனிமையில என்ன பண்றதுன்னு தெரியல. சரி வலையில புகுந்து வலைப்பூக்களை அலசுவோம்னு, அப்படியே இளையராஜா பாட்டு போட்டுவிட்டு செட்டிங்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வலையில உலாவிக்கிட்டு இருந்தேன் .ஹே ராம் பாடல்கள் பாடிக்கிட்டு இருக்கும்போதே ஒரு பாட்டுல நடுவுல

வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

அப்படினு ஒரு செய்யுள் (இது பாசுரமா இல்லை வேற வகையான்னு எல்லாம் எனக்கு சரியா தெரியாது .நான் சின்ன வயசுல தமிழ் பாடத்துல படிசசதால எனக்கு செய்யுள் அவ்வளவுதான்) வந்தது.நானும் என்னை அறியாமலேயே அந்த செய்யுளை பாட்டு வடிவத்தில் பாடிக்கிட்டு இருந்தேன்(சரி சரி பாடுற மாதிரி ). திடீருன்னு நம்ம மூளைக்குள்ள (சாமி சத்தியமா கொஞ்சம் இருக்குப்பா) "டேய் நீ இப்ப பாடுன அந்த செய்யுளை ஞாபகம் வைக்க சின்ன வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன்னு" அலாரம் அடிக்குது."அட ஆமாம்"னு அப்படியே மல்லாக்கப் படுத்துக்கிட்டு விட்டத்தை வெறிச்சு யோசிச்சப்போ இந்த மாதிரி இன்னும் ஒரு ரெண்டு மூணு இடங்களில் சினிமா பாடல்களின் நடுவில் வந்த தமிழ் செய்யுள்கள் பாட்டு வடிவத்திலேயே ஞாபகம் வந்தது. உதாரணத்துக்கு நம்ம தலைவரோட "தளபதி" படத்துல "ராக்கம்மா கைய தட்டு" பாட்டுக்கு நடுவுல வர்ற

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ல்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே செய்யுள் பாட்டு வடிவத்துல நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் சங்கமம் படத்துல "மார்கழி திங்களல்லவா" பாட்டு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வர்ற

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

இப்படி யோசிக்க யோசிக்க நெறய ஞாபகம் வருது.ஞாபகத்துக்கு வந்த பாடல் வடிவத்தில் இருந்த மற்ற சில செய்யுள்களின் பட்டியல் பதிவின் இறுதியில் உள்ளது. .சினிமா பாட்டு மட்டும் இல்லாம சின்ன வயசுல ராகதோட பாட்டு வடிவத்துல சொல்லிக் குடுத்த "நிலா நிலா ஓடி வா", "கை வீசம்மா கை வீசு" ,"மாம்பழமாம் மாம்பழம்" அப்புறம் 10த் அண்ட் 12த்-ல எங்க தமிழ் வாத்தியார் ராகம் போட்டு சொல்லி குடுத்த "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ", வஞ்ச புகழ்ச்சி அணிக்கு எடுத்துக்காட்டா சொன்ன

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நா புலவர்
பாரி ஒருவனுமல்லன் மாரியும்
உண்டீங்கு உலகு புரப்பதுவே

பள்ளியிலே காலை பிரார்த்தனையில் பாடிய "சண்முகக்கடவுளே போற்றி சரவணத்துதித்தாய் போற்றி" , "நெஞ்சக்கன கல்லு நெகிழ்ந்துருக தஞ்சத்தருள் ஷண்முகனுக்கியல் சேர்"
எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு.ஆனா இந்த செய்யுளுடன் படித்த மற்ற செய்யுள்களெல்லாம் சரியா ஞாபகம் வரலை.சரி எதுக்கு இப்போ மொக்கை போட்டு கிட்டு இருக்க,விசயத்துக்கு வான்னு சொல்றீங்களா.நம்ம பள்ளிகளில் இந்த மாதிரி ,நமக்கு படிக்கிறதுக்கும் ஞாபகம் வைச்சுகிறதுக்கும் கஷ்டமா இருக்குற இந்த செய்யுள் பகுதிகளை எல்லாம் இந்த மாதிரி பாடல் வடிவத்தில் (இசை வடிவத்தில்) சொல்லிக் குடுத்தா எல்லோரும் நிச்சயமா அதை நல்லா ஞாபகம் வைத்து கொள்ளலாம். தளபதி பட பாட்டுக்கு நடுவுல வர்ற "குனித்த புருவம்" செய்யுளை உங்களில் அநேகம் பேர் பாடலுடன் சேர்ந்து சொல்ல முடியும்னு நான் நம்பறேன்.அந்த காலத்துல இதை எழுதினவங்களும் செய்யுளை இசை வடிவததில்தான் எழுதி இருக்காங்க. அதனாலே இதுக்கு இசை வடிவம் குடுக்கறதும் ரொம்ப கஷ்டம் இல்லை. (இளையராஜாவின் திருவாசகம் எடுத்துக்காட்டு) .ஒண்ணு ரெண்டு வருசங்களுக்கு முன்னாடி எப்பவோ தமிழ்நாடு அரசு ஆசிரியர்களை இந்த மாதிரி interactive way-ல பாடம் சொல்லித்தர பயிற்சி எல்லாம் குடுத்தாங்க . அதுபோல ஏன் இந்த செய்யுள்களையும் சொல்லிக் கொடுக்கக் கூடாது??!. அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.

அப்பாடி! பதிவுக்கு பதிவும் ஆச்சு கருத்துக்கு கருத்தும் ஆச்சு.

பின் குறிப்பு :

இப்படி சினேமா பாடல்களின் இடையில் அல்லது பாடலாகவே வந்தவை சிலவற்றின் தொகுப்பு:

திருவிளையாடல் படத்தில் வரும்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
சரியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.



ஒளவையார் படத்தில் வரும்

அரியது கேட்கின் வரிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதலரிது
மானிடராயினும் கூன்குருடு செவிடு
பேடுநீங்கிப் பிறத்த லரிது
பேடுநீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயலரிது
தானமும் தவமுந்தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே


திருவருட்செல்வரில் வரும் "பண்ணின் நேர் மொழியாள ", "மாசில் வீணையும ", " காதலாகிக் கசிந்து ", " சதுரம் மறை தான் துதி செய்து ", "அப்பன் நீ " போன்ற தேவாரப் பண்களும் " உலகெலாம் உணர்ந்து" என்ற பெரிய புராணக் காப்புச் செய்யுளும் , திருமால் பெருமையில் வரும் "பச்சைமாமலை போல் மேனி" போன்ற அருமையான பழந்தமிழ்ப் பாக்களும,பாரதியார் பாடல்களான

1) நல்லதோர் வீணை செய்து அதை
2)காக்கை சிறகினிலே நந்தலாலா
3)காணி நிலம் வேண்டும் ..............மற்றும் பல


பரதிதாசன் பாடலான தமிழுக்கும் அமுதென்று பேர் இது போல எவ்வளவோ எடுத்துக்காட்டு சொல்லலாம்.மேற்சொன்னவை எல்லாம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தவை மட்டும் தான்.இன்னும் எவ்வளவோ உள்ளது. தெரிந்த அன்பர்களும் நண்பர்களும் சொல்லலாம்.

0 comments: