நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களுடன் ஒரு உல்லாசப் பயணம் செய்யுற வாய்ப்பு போன வார இறுதியில கிடைச்சது.மந்த்ராலயா,துங்கபத்ரா அணை,ஹம்பி இது மூணும் சேர்ந்த package trip தான் போனோம்.இருந்தாலும் இந்த டிரிப்-ல முழு கவனத்தையும் ஈர்த்தது ஹம்பிதான்.ஹரிஹரா மற்றும் புக்கா என்ற இரண்டு சகோதரர்களால் சுமார் 1258-1336 ல் துங்கபத்ரா நதியின் கரையில் நிறுவப்பட்டு பின்பு கிருஷ்ணதேவராயர் என்கிற சக்ரவர்த்தியின் ஆட்சியின் போது பட்டொளி வீசிப் பறந்த விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகர் ஹம்பி. அந்த காலத்தில் நமது மக்கள் எப்படி வாழ்ந்திருக்கலாம் என்கிற நமது கற்பனைக்கு ஒரு வடிவம் கொடுப்பதுடன், எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நம்மை ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் ஒரு நகரம் இப்பொழுது அங்கு இருப்பது காலம்,பருவநிலை மாற்றங்கள்,அயல்நாட்டு படைஎடுப்பாளர்கள் போன்ற பல்வேறு காரணிகள் விட்டு வைத்திருக்கும் எச்சங்கள்தான்.ஆனால் இவையே சரித்திரத்தின் எண்ணில் அடங்கா பக்கங்களில் ஒரு சிலவற்றை நம்மை கை பிடித்து அழைத்து சென்று காட்ட போதுமானதாக உள்ளது.அதுவும் சூரிய அஸ்தமனத்தின் போது இந்த நகரம் மற்றும் அதன் கலை அழகை கண்டு ரசிக்க கண் கோடி வேண்டும்.
நாங்கள் அங்கு பார்த்த சில சரித்திர சான்றுகளைப் பற்றிய சுருக்கமான தொகுப்பு கீழே காண்பது:
ஹேமகூட கோவில்கள்
ஹொய்சாளர்கள் முறையில் கட்டப்பட்டு ஜைன முறை கோபுரங்கள் உடையவை.ஒரே கோவிலில் சிவன்,விஷ்ணு இரண்டு கடவுள் ஆராதனைகளும் நடந்திருக்கிறது.இந்த கோவிலில் மூன்று கர்ப்பகிரகங்கள்.ஆனால் கோவிலின் உள்ளே செல்ல ஒரு வழி.
விருபாக்க்ஷா கோவில் :
சிவன் கோவில்.மூன்று வெவ்வேறு கட்டிடக்கலை அமைப்புகளில்(திராவிட , விஜயநகர , சாலுக்கிய) கோபுரங்கள் கொண்ட மிகப் பெரிய கோவில்.இங்கு ஒரே கர்ப்பகிரகம்.ஆனால் கோவிலின் உள்ளே செல்ல மூன்று வழி.
உக்கிர நரசிம்மர் :
22 அடி உயரமுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பக்கலை அதிசயம்.எப்படி செதுக்கியிருப்பங்கன்ணு நானும் ரொம்ப நேரம் யோசிச்சேன்.ஊஹூம் நம்ம அறிவுக்கு எட்டலை.
விட்டலா கோவில் :
கிருஷ்ணர் கோவில்.இங்க இருக்கிற இசைத் தூண் மண்டபமும், கல் ரதமும் உலகப் புகழ் பெற்றவை.அதிலும் இந்த கல் ரதம் அம்சம்.
லோட்டஸ் மஹால்:
அந்த காலத்துல ராணிகள் அந்தப்புரம்.இதில் மண் குழாய்கள் மூலம் தண்ணீரை சுற்றி வர செய்து ஒரு மாதிரி உள்ளே எல்லாம் குளுமையாக வைத்திருக்கிறார்கள். அந்தக் கால ராஜாவா இருந்தாலும் நம்மள மாதிரி ஆளா இருக்கார்.தாய்க்குலத்துக்கு மட்டும் எல்லா வசதியும் செஞ்சு குடுத்திருக்கார்.
நிலக்கடலை விநாயகர் :
என்னடா பேரு ரொம்ப வித்தியாசமா இருக்கேனு நெனைக்காதீங்க.இது உள்ளூர் மக்கள் வச்ச பேரு.18 அடி உயரம் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிக அருமையான சிலை.பார்த்தவுடன் பிரமிக்க வைத்த ஒன்று. ஒரு blog-ல 5 படத்துக்கு மேலே போட முடியாதுங்கறதால மத்த படம் எதுவும் போட முடியலை
புஷ்கரணி:
இது நீங்க நெறய படத்துல பார்த்திருக்கலாம்.நெறய படிக்கட்டுகள் கொண்ட பூஜைக்காக மட்டும் தண்ணீர் எடுக்க பயன்பட்ட புனிதக் குளம்.
இன்னும் யானை லாயம்,மன்னர் அமர்ந்த துலாபாரம்,கிருஷ்ணர் கோவில்,புரந்தர மண்டபம்..... இப்படி நிறைய இடங்கள் பார்த்தோம்.எல்லாத்தையும் முழு விவரங்களோட படம் போட்டு எழுதினா டூரிஸ்ட் கைட் மாதிரி ஆயிடும்.(இப்பவே கொஞ்சம் அப்படித்தான் இருக்குன்னு சொல்லப்படாது) .
sight seeing ( இது வேற.நாம எப்பவும் பண்ற sight seeing :-)) வேற) முடிந்து திரும்ப பெங்களூருக்கு பஸ்ல திரும்ப வரும்போது,வேகமா ஓடற பஸ்ல மிதமான இருட்டுல சொகமா ஜன்னல் சீட்ல காத்து வாங்கிட்டு வந்தப்போ பார்த்த இடங்களின் அழகிலிருந்து மீண்டு மற்ற விசயங்களை நம்ம அறிவு யோசிக்க ஆரம்பித்தது(எப்பவும் போல).
துங்கபத்ரா நதியோரம் உள்ள ஒரு அருமையான நகரம். நிச்சயம் நல்ல முறையில் விவசாயம் நடத்தி இருக்க வேண்டும்.கட்டிடக் கலையின் சிறப்பு ,ஊரை பிரித்திருக்கும் முறை, தொழில்நுட்ப அறிவு(விருபாக்க்ஷா கோவில் கோபுர பிம்பம் வேறொரு இடத்தில் ஒரு சிறிய துளை மூலம் தலைகீழாக நாள் முழுவதும் விழுவது,பாதாள சிவன் கோவிலில் தண்ணீர் சென்று வர செய்திருக்கும் வசதிகள், அந்தப்புரம் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்க மண் குழாய்களில் தண்ணீர் சுற்றி வர செய்திருப்பது ,இன்னும் இப்படி நிறைய..), அனைத்து சமயங்களையும் ஆதரித்து இருப்பது (சிவனுக்கு விருபாக்க்ஷா கோவில்,விஷ்ணுவுக்கு விட்டலா கோவில், ஹேமகூட கோவில்களில் ஜைன கோபுரங்கள்,ராணி அந்தப்புரத்தில் இஸ்லாமிய கட்டிடக்கலை...), சட்டம் ஒழுங்கு(ஏழு விதமான அங்காடி வீதிகளுக்கும் கதவோ மறைப்புகளோ இல்லாதது ,குற்றம் செய்பவர்களை கை கால்களை பிணைத்து தண்டிக்க ஒரு இடம்) , சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் (கோவில்களில் இசை மற்றும் நாட்டிய அரங்கம்,நவமி பண்டிகை,புரந்தர தாசர் போன்ற கவிகள் ), சிறந்த பொருளாதாரம்(காவல் நிறைந்த நாணய சாலை,முத்து ,ரத்தினம் ,தங்கம், மிளகு, பாக்கு .. இப்படி ஏழு கடைவீதிகள், வெளிநாட்டு வர்த்தகர்களுடன் வியாபாரம்), பெண்களுக்கு மரியாதை ,பாதுகாப்பு ,சிறந்த வீரம்,கல்வி....... இன்னும் வேறென்ன வேண்டும் .They must have lived a complete and happy life.
மிக நீண்ட காலத்துக்கு முன்பே நிச்சயமாக மிகச் சிறப்பாகவும்,நாகரிகத்துடனும் வாழ்ந்திருக்கிறார்கள்.அவர்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து நாம் சரியாக தொடர்ந்திருக்கிறோமா தெரியவில்லை.எனக்கு ஏனோ, நாம்தான் வரலாற்றிலிருந்து சரியாக பாடங்களை கற்று கொள்ளவில்லையோ என்று இப்பொழுது தோன்றுகிறது. ஹம்பி கொடுத்த ஆச்சரியமும் வியப்பும் அகல இன்னும் சிறிது நாட்கள் ஆகும் .
Friday, February 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment